குற்றம்

பராமரிப்பு மையத்தில் நாயை அடித்து கொலைசெய்த ஊழியர்: சிசிடிவி காட்சியால் அம்பலமான குற்றம்

பராமரிப்பு மையத்தில் நாயை அடித்து கொலைசெய்த ஊழியர்: சிசிடிவி காட்சியால் அம்பலமான குற்றம்

நிவேதா ஜெகராஜா

சென்னையில் உள்ள பிரபல செல்ல பிராணிகள் பராமரிப்பு மையத்தில் பராமரிப்புக்காக விடப்பட்ட நாயை அடித்துக் கொன்றதாக காவல்நிலையத்தில் நாயின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி கிராமம் பகுதியைச் சார்ந்தவர் ஷர்மிளா. இவர் சார்லி என்கின்ற நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தாயார் சாலை விபத்தில் அடிபட்டுள்ளார். மேலும் ஷர்மிளா மேற்படிப்பு படிப்பதற்காக ஜெர்மனி செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் ராம் என்பவரால் நடத்தப்படும் தனியார் செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையத்தில் சார்லியை மாதம் 12 ஆயிரம் ரூபாய் செலவில் பராமரிப்பதற்காக கொடுத்துள்ளார். கொடுத்த சில மாதங்களிலேயே சார்லியின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஷர்மிளா உரிமையாளரிடம் கேட்கும்பொழுது அவர், “அது சாதாரண அலர்ஜிதான். அதற்கு உண்டான உரிய சிகிச்சை மேற்கொண்டு வருகின்றோம். எங்கள் வீட்டின் கீழ் தளத்தில் தான் நாய்கள் பராமரிப்பு மையம் இருக்கிறது. ஆகவே 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் பராமரித்து வரும் நாயை வீடியோ கால் மூலம் நீங்கள் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஒரு முறை கூட ஷர்மிளா போன் செய்யும் பொழுது ராம் வீடியோ-கால் செய்யவில்லை என நாயின் உரிமையாளர் சர்மிளா கவலை அடைந்துள்ளார். இந்நிலையில் ஜெர்மனியிலுள்ள ஷர்மிளா விற்கு ராம் போன் செய்து சார்லி ஹார்ட் அட்டாக்கில் திடீரென உயிரிழந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்த ஷர்மிளா, ஜெர்மனியிலிருந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வளர்ப்பு பிராணி பராமரிப்பு மையத்திற்கு வந்துள்ளார். இறப்பதற்கு முதல்நாள் வரை சார்லி நலமாக தான் இருந்ததற்கு உண்டான சிசிடிவி காட்சியை ராம் காட்டியுள்ளார். அந்த சிசிடிவி காட்சி மீது சந்தேகமடைந்த சர்மிளா எடிட் செய்யாத காட்சியை காட்ட சொல்லி வற்புறுத்தி உள்ளார். அப்படி காட்டவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன் என கூறியிருக்கிறார். இதையடுத்து எடிட் செய்யாத சிசிடிவி காட்சியை ராமு வேறுவழியின்றி காட்டியிருக்கிறார். அந்த சிசிடிவி காட்சியில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சார்லி மார்பில் ஓங்கி குத்துவது போல் பதிவாகியுள்ளது. அதன்பிறகு நாயை தரதரவென இழுத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சார்லி தரையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறது.

சிசிடிவி கமராவில் பதிவாகி இருப்பதை பார்த்த சர்மிளா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக எந்த ஒரு விளக்கமும் அளிக்காத ராம் மீது வேளச்சேரி காவல்நிலையத்தில் சர்மிளா புகார் அளித்திருக்கிறார் சர்மிளா. புகாரை பெற்றுக் கொண்ட வேளச்சேரி போலீசார் புகார் மனு பெற்றதற்கு உண்டான சான்றிதழை வழங்கி ராமிடம் உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

`தன் செல்லப்பிராணி பாதுகாப்பாக இருக்கும் வேண்டும்’ என பராமரிப்பு மையத்தில் மாதம் பல ஆயிரம் செலவு செய்து. விட்டுச் சென்ற சூழலில் பராமரிப்பு மையத்தில் செல்லப்பிராணிகள் துன்புறுத்தப்படுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார். மேலும் அங்கு இருக்கக்கூடிய மற்ற செல்லப்பிராணிகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் மீட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது வேறு ஒரு வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட வேண்டும் என சர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ராம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.