அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளிய புகாரில் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் மற்றும் 11 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில், தேனி மாவட்டம் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம் கடத்தியதாக ஞானராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் மணல் எடுக்கப்பட்ட அரசு நிலங்கள், தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கனிம வளத்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள், 6 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு தனிநபர் என 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர். அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்குத் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஞானராஜன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.