சென்னை கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே நேற்று நள்ளிரவு சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், சாலையோர தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
விலையுயர்ந்த காரான இதைப் பின் தொடர்ந்து மொத்தம் 4 கார்கள் வந்துள்ளன. சிட்டி சென்டரை தாண்டியதும் கட்டுப்பாட்டை இழந்த கார், தீப்பொறி பறக்க சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்த பெண்ணை மீட்டனர். விபத்துக்குள்ளான காரில் 4 பேர் பயணித்தனர். காரை ஓட்டி வந்த பெண்ணுக்கு மட்டும் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. அந்த பெண் போதையில் இருப்பதாக பொதுமக்கள் கூறியும் போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.