குற்றம்

பெண் தொழிலதிபரின் படம் இன்ஸ்டாகிராமில் தவறாக சித்தரிப்பு : காரணம் என்ன ?

webteam

சென்னையில் ஒருதலைக் காதல் நிறைவேறாத கோபத்தில், பள்ளித் தோழியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் காவல் துறையினரிடம் சிக்கினார்.

சென்னை, அசோக் நகரைச் சேர்ந்த பெண் தொழிலதிபரின் செல்போனுக்கு சில நாட்களாக தொடர்ந்து ஆபாச அழைப்புகள் வந்துள்ளன. வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்களும் குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. அத்துடன் அவருக்கு இன்ஸ்டாகிராமிலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் அந்த பெண் தொழிலதிபரின் இன்ஸ்டாகிராம் படங்களை ஆபாசமாக சித்தரித்து போலியாக ஒரு பக்கத்தை தொடங்கி, அவருடைய செல்போன் எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து குமரன் நகர் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் விசாரித்தனர். ஐ.பி. முகவரியை வைத்து ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவர் ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில், அந்த மாணவர், பெண் தொழிலதிபரின் மகளுடன் பள்ளியில் படிப்பவர் என தெரியவந்தது.

தோழி தனது காதலை நிராகரித்ததாகவும், தாயின் அறிவுரையால்தான் காதல் கைகூடவில்லை என கருதி, பழிவாங்குவதற்காக இவ்வாறு செய்ததாகவும் அந்த மாணவர் கூறியுள்ளார். இதையடுத்து, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.