கைது செய்யப்பட்டவர்கள் புதியதலைமுறை
குற்றம்

கார் விற்க வந்த இடத்தில் தொழிலதிபரை தாக்கி கார், செல்போன் பறிப்பு.. சென்னையில் அட்டகாசம்!

சென்னையில், தொழிலதிபரை தாக்கி விட்டு அவரது கார் மற்றும் விலையுயர்ந்த செல்போனை பறித்து சென்ற வழக்கில் பெண் உட்பட நான்கு நபர்கள் கைது.

ஜெ.அன்பரசன், சண்முகப் பிரியா . செ

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் துரை ரகுபதி(30). இவர் பழைய கார்களை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். இந்தநிலையில், துரை ரகுபதி தன் வாடிக்கையாளரின் காரை பணத்தேவைக்காக அடமானம் வைக்க எண்ணி மதுரையை சேர்ந்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை அணுகியுள்ளார்.

பாண்டியனும், சென்னையில் ஒரு இடைத் தரகரிடம் பேசியுள்ளதாகவும்‌ அங்கு சென்று காரை காண்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்காக துரை ரகுபதியும் இரு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று மாலை துரையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பாண்டியன் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் காத்துக்கொண்டிருப்பதாகவும் காரை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் காட்டும்படியும் கூறியுள்ளார். துரை தனது மாருதி பாலினோ காரை எடுத்துக் கொண்டு பாண்டியன் கூறிய இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு காத்திருந்த இருவர் பாண்டியன் அனுப்பியதாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு காரை டெஸ்ட் டிரைவ் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

துரை சம்மதம் தெரிவிக்கவே அவரையும் காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டு சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற உடன் காரில் ஏறிய ஒருவர், துரை ரகுபதியை சரமாரி தாக்கத் தொடங்கியுள்ளார். எதுவும் புரியாமல் தவித்த துரையிடம்,’ பாண்டியன் தங்களுக்கு பணம் தரவேண்டும் என்றும் உடனியாக அவனை இங்கே வரச்சொல்’, என மிரட்டியுள்ளனர்.

அதற்கு துரை இது என்னுடைய கார் பாண்டியனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவரை கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு ஏற்கனவே காத்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் துரை ரகுபதியை கட்டையால் தாக்கி கார் மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

புகாரின் பேரில் CMBT காவல்துறையினர் CCTV காட்சிகளை கைப்பற்றி கௌதம், அவரது தோழி ஸ்வேதா, நாகராஜன், கிஷோர் பாலாஜி ஆகிய நான்கு நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கார் கடத்தல் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.