குற்றம்

வேலூர்: 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான போராட்டம்.. அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு

Sinekadhara

கே.வி.குப்பம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கிய வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தநிலையில் அதனை மீண்டும் அமல்படுத்த கோரி நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல், போராட்டம், ஆர்பாட்டம் நடைபெற்றது. ஒருசில இடங்களில் பேருந்துகளும் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் 10.5% இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரியும், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும் இன்று மதியம் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் பா.ம.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டம் முடிந்த நிலையில், கே.வி.குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு பகுதியில் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் பேருந்தின் முன் மற்றும் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமடைந்துள்ளது. கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் பேருந்தில் இருந்து அவசர அவசரமாக இறங்கி ஓடினர்.

சம்பவ இடத்தில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடையாளம் தெரியாத சிலர் கிரிக்கெட் மட்டையால் பேருந்து கண்ணாடிகளை உடைத்து சென்றது தெரியவந்ததை அடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.