தலித் இளைஞரை காதலித்த மகளை, பெற்ற அப்பாவே குத்திக்கொன்றதால் திருமணம் நடக்க இருந்த வீடு சோகமயமானது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகிலுள்ள பூவதி கண்டியை சேர்ந்தவர் ராஜன். பெயின்டர். இவர் மகள் ஆதிரா (22). மஞ்சரி மெடிக்கல் கல்லூரியில் டயாலிஸ் மையத்தில் வேலைப் பார்த்து வந்தார். ஆதிராவுக்கும் அருகிலுள்ள கோயிலண்டி என்ற பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் காதல். அந்த வீரர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தக் காதலுக்கு ஆதிராவின் தந்தை எதிர்ப்புத் தெரிவித்தார். அப்பா சம்மதிக்க மாட்டார் என்ற நிலையில் காதலை கைவிட மறுத்த ஆதிரா, அந்த ராணுவ வீரருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவர்கள் திருமணம் செய்ய இருந்த நிலையில், அவர்களுடன் சமாதானம் பேசினார் ராஜன். ’வீட்டை விட்டு ஓடிப் போனது யாருக்கும் தெரிய வேண்டாம். இவ்வளவு தீவிரமாகக் காதலிப்பீர்கள் என தெரியவில்லை. நானே உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். என்னை நம்புங்கள்’ என்று கூறி ஆதிராவை வீட்டுக்கு அழைத்து வந்தார். நம்பி வந்தார் ஆதிரா. இதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன.
இந்நிலையில் ராஜன் நேற்று போதையில் இருந்தார். அவரால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டுக்கு வந்த அவர், ஆதிராவிடம் சண்டைப் போட்டார். ’திருமணத்தை நிறுத்திவிடலாம், அந்த மாப்பிள்ளை வேண்டாம்’ என்று சொன்னார். அதை மறுத்த மகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்த கத்தியை எடுத்துக் குத்த முயன்றார். ஆதிரா அலறியடித்து வீட்டை விட்டு வெளியில் ஓடினார். அருகில் இருந்த உறவினர் வீட்டுக்குள் ஓடிய அவரை, விடாமல் துரத்தினார் ராஜன்.
பின்னர் அந்த வீட்டின் கிச்சனில் சிக்கிக்கொண்ட ஆதிராவின் நெஞ்சில் கத்தியால் ஓங்கிக் குத்தினார் ராஜன். இதில் ரத்த வெள்ளத்தில் ஆதிரா சரிந்தார். இதைக்கண்டதும் அங்கிருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு ஓடிவிட்டார் ராஜன்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆதிராவை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.