திண்டிவனம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தர்மன்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே சிறுமி வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவலை சிறுமி, தர்மனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னையிலிருந்து சின்னநெற்குணம் கிராமத்திற்கு வந்த தர்மன், சிறுமியை அழைத்துக் கொண்டு சென்று பெரும்பாக்கத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் மயிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
புகாரையடுத்து மயிலம் போலீசார் சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து விசாரித்ததில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் பெண்ணுக்கு 15 வயது என்பதால் மயிலம் போலீசார் இருவரையும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இரு தரப்பையும் விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை திருமணம் செய்த தர்மன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.