குற்றம்

பாஜக பிரமுகரை தாக்கிய இருவர் கைது!

பாஜக பிரமுகரை தாக்கிய இருவர் கைது!

webteam

ராமநாதபுரத்தில் பாஜக பிரமுகரை கடத்திச் சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கிய சம்பவத்தில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் எஸ்.எம்.அக்ரஹாரம் அருகே சுப்பையா சந்து பகுதியில் வசித்து வருபவர் ராமன் மகன் வீரபாகு. இவர் ஆட்டோ டிரைவராகவும் பா.ஜ.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரை ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருவர், பேராவூரில் உள்ள ஒருவரை அழைத்து வர ஆட்டோ தேவைப்படுகிறது என்று அழைத்துச் சென்றுள்ளனர். பேராவூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே இருளில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆட்டோவை நிறுத்தியதும், அந்த இருவருடன் மேலும் 3 பேரும் சேர்ந்து அரிவாள், கத்தி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களால் சுப்பையாவை தாக்கியுள்ளனர். 5 பேரும் தாக்கிக் கொண்டிருந்த போதே வீரபாகு அவ்வழியாக வந்த நகர்ப்பேருந்தில் ஏறி தப்பி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.

பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் அவருக்கு தலை, கை, கால்கள் ஆகியனவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் ராமநாதபுரம் எஸ்.நடராஜ் டி.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சிவசக்தி ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர். தாக்கியவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக வீரபாகுவின் மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர். 

வீரபாகு தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் குமார் ஆத்ம கார்த்திக், இளைஞணி நிர்வாகி மணிமாறன் ஆகியோர் உட்பட ஏராளமான பா.ஜ.க.வினர் குவிந்தனர். மேலும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இச்சம்பவம் காரணமாக அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் பதட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் சுப்பையா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.