குற்றம்

பெங்களூரு பாஜக நிர்வாகி சொத்து தகராறில் கொலை

பெங்களூரு பாஜக நிர்வாகி சொத்து தகராறில் கொலை

webteam

பெங்களூரு பாஜக நிர்வாகி சொத்து தகராறு காரணமாக உறவினர்களே கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 40). இவர் கர்நாடக மாநில பாஜகவின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் துணைத் தலைவராக இருந்தார். கன்னட அமைப்பிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். ஆனேக்கல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் மிளகாய்பொடி தூவி இவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த கொலை குறித்து சூரியநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து தகராறில் இவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவரது உறவினர்களான சந்தீப், ராஜேஷ், கிஷோர், சந்தோஷ் ஆகியோர் இணைந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக ஹரீஷ்-ன் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனேக்கல் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்குள் பாஜகவை சேர்ந்த 2 நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டார். தற்போது ஹரீஷ் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.