செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு கிராமத்தில் அரசு விதைப் பண்ணையின் உள்ளே புதிய கட்டட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் புவனகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புவனகிரி போலீசார் வண்டுராயன்பட்டு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்த 8 பேரை புவனகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், மேற்கு வங்க மாநிலத்தில் போலியாக ஆதார் கார்டை பெற்று தங்கி இருந்து கட்டிட வேலை செய்ததும், அவர்கள் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் முகமது மிராட்அலி (32), முகமது அப்துல்லா (28), முகமது ஆரிப்கோசன் (29), முகமது மினருல்ஹக் (18), முகமதுஷகில்அலி (20), முகமது ரோம்சன்அலி (20), முகமதுமிராசுல் இஸ்லாம் (26) மற்றும் அவல்ஷேக் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், புவனகிரி காவல் நிலையத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.