குற்றம்

ஸ்விக்கி, ஸொமெட்டோ டெலிவரி பேக்குகளில் போதைப் பொருட்கள்! சிக்கிய பீகார் இளைஞர்கள்

webteam

ஆன்லைன், டிஜிட்டல் அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது. அந்த வகையில் ஸ்விக்கி, zomato உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் பெரும் பங்குவகிக்கிறது.

இந்நிலையில், "ஐயன்" படப் பாணியில் புதிதாக யோசித்து போதைப் பொருள் விற்று போலீசில் சிக்கியுள்ளனர். இதற்கும் ஸ்விக்கி, ஸொமேட்டாவுக்கு என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? விரிவாக பார்க்கலாம்.

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ டெலிவரி ஏஜென்ட் போல் மாறுவேடத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு இருந்த ஒருவரைக் கைது செய்தது பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (CCB). கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 0.14 கிராம் எடையுள்ள 12 LSD,ஒரு கைப்பேசிகள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் தலைமறைவாக இருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர் பிஹாரை சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்ட நபரை அவர்தான் வழிநடத்தி வந்ததாகவும், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள்களை வழங்க வேண்டிய வாடிக்கையாளரின் இருப்பிடம் அப்பொழுது பயன்படுத்த வேண்டிய ஆடையின் நிறம் ஆகியவற்றைத் தெரிவித்து வந்ததாகவும் தலைமறைவாக உள்ளவரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் Swiggy மற்றும் Zomato நிறுவனத்தின் சீருடையை அணிந்து, Swiggy மற்றும் Zomato பைகளில் விநியோகம் செய்துள்ளார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி, ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்களில் டெலிவரி ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்கள் மீது NDPS சட்டம் 1985ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

உணவு டெலிவரி நிறுவனங்களை போல் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- அருணா ஆறுச்சாமி