குற்றம்

”இந்த சாதியா என கேட்டு மிரட்டினார் அமைச்சர் ராஜகண்ணப்பன்”- பிடிஓ கண்ணீர் மல்க புகார்

நிவேதா ஜெகராஜா

“நீ எஸ்சி பிடிஓ-வா? இவனை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்” என்றுகூறி, தன்னை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக பேசி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியாக அரசு அதிகாரியொருவர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தன் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓ-வாக (வட்டார வளர்ச்சி அலுவலர்) ராஜேந்திரன் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது உதவியாளர் சக்தியேந்திரன் மூலம் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அவருடன் பணிபுரியும் மற்றொரு அரசு அலுவலரை சிவகங்கையில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கடந்த மார்ச் 26ஆம் தேதி அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் அமைச்சர் இல்லத்திற்கு மறுநாள் காலை 27ம் தேதி பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அன்பு கண்ணன் ஆகியோர் சென்றுள்ளார்.

அப்போது ராஜேந்திரனை பார்த்த அமைச்சர் ராஜகண்ணப்பன் , "வாய்யா... நீதான் எஸ்.சி. பிடிஓ-வா? உன்னை என்ன பண்றேன்னு பாக்குறியா?” என்று தகாத வார்த்தைகளால் இழிவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத பிடிஓ ராஜேந்திரன், கண்கலங்கியபடி அமைச்சர் முன்பு நின்ற நிலையில் அடுக்கடுக்காக ராஜேந்திரனின் சாதி பெயரை இழிவாக சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், “முதுகுளத்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர்களான பூபதி மணி (கிழக்கு ஒன்றியம்) மற்றும் சண்முகம் (மேற்கு ஒன்றியம்) இவர்களின் பேச்சைக் கேட்டு நடக்காத நீ, பிடிஓ பதவிக்கு தகுதி இல்லாதவன். உன்னை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து, ஒரு வழி பண்ணி விடுவேன். முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கழகச் செயலாளர் தர்மர் உள்ளார். இதனால் நீ சேர்மன் பேச்சை கேட்டு தான் கேட்பீயா? நான் சொல்வதைக் கேட்க மாட்டியா?” என்று மிரட்டும் தொனியில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து பிடிஓ ராஜேந்திரன் முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “அமைச்சரின் இத்தகைய இழிவான செயலுக்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். அவர் பேசுகையில், “அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பெயரை சொல்லி என்னை இழிவாக பேசிய சம்பவம், எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது” என்றும் கூறினார்.

இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நாம் தொடர்பு கொள்ள முற்பட்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவருடைய உதவியாளர் சக்தியேந்திரனை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது `அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு தவறான தகவலை பரப்புகின்றனர்’ என மறுப்பு தெரிவித்தார்.