குற்றம்

ஆவடி: பிரார்த்தனை செய்த போது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக மதபோதகர் கைது

kaleelrahman

ஆவடி அருகே சர்ச்சில் பிரார்த்தனை செய்த போது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்துள்ள மோரை, நியூ காலனியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). கிறிஸ்தவ மத போதகரான இவர், இதே பகுதியில் உள்ள திருமலை நகரில் சர்ச் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவருக்கும், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சேர்ந்த 48வயது உடைய பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் கஷ்டம் தீரும் என கூறி உள்ளார். இதனையடுத்து, கடந்த 17ஆம் தேதி திருமலை நகரில் உள்ள சர்ச்சுக்கு தனியாக சென்ற அந்த பெண் முட்டி போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அங்கு இருந்த ஸ்காட் டேவிட், அவரை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அலறிக்கொண்டே அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். மேலும், இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.

புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், மத போதகர் ஸ்காட் டேவிட்டை இன்று காலை கைது செய்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் ஸ்காட் டேவிட்டை திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.