காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோயில் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், மர்ம நபர்கள் பட்டா கத்திகளுடன் வந்து ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு தாம்பரம் சாமியார் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக், வயது 38. இவர், இரு நண்பர்களுடன் இணைந்து தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிந்தபோது சிங்கபெருமாள்கோயில் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் ஆட்டோவை நிறுத்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் எதிர்பாராத நேரம் பார்த்து ஆட்டோவில் இருந்த கார்த்திக்கை தாக்கிவிட்டு மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
அங்கு இருந்த மற்ற ஆட்டோ ஒட்டுநர்கள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர். பங்க் ஊழியர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஆகியோர் உயிருக்கு போராடிய கார்த்திக்கை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு, செய்து சிசிடிவி கேமரா பதிவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.