குற்றம்

‘வெளியே சொன்னா கொல்லுவேன்’.. மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டிய டிரைவர்..!

‘வெளியே சொன்னா கொல்லுவேன்’.. மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டிய டிரைவர்..!

Rasus

திருவேற்காட்டில் 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்தவர் விஜயன். வயது 55. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். இந்நிலையில் விஜயனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் விஜயன் அடிக்கடி அப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் வீட்டிலும் அடிக்கடி தங்கி வந்துள்ளார். அப்பெண்ணும் விஜயனை பெரிய அளவில் தவறாக நினைக்காததால் விஜயன் நினைத்த நேரத்திற்கு தன் வீட்டிற்கு செல்வது போல் அப்பெண்னின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

விஜயன் பழகி வந்த பெண்ணின் மகள் தற்போதுதான் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்துள்ளார். ஆட்டோ டிரைவர் விஜயன் தான் மாணவியை பள்ளிக்கு போகும்போதும், பள்ளி முடிந்து வரும்போதும் அழைத்து வருவாராம். இதனிடையே மாணவிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டதோடு வயிற்று வலியும் ஏற்பட்டு அவதிப்பட்டிருக்கிறார். மகளுக்கு ஏன் இவ்வாறு தொடர்ச்சியான பிரச்னைகள் ஏற்படுகிறது என தெரியாமல் பரிதவித்த மாணவியின் அம்மாவான அப்பெண், மருத்துவமனைக்கு அம்மாணவியை அழைத்துச் சென்றிருக்கிறார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். அதுவும் 7 மாத கர்ப்பம் என தெரிவித்ததால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மாணவியிடம் நடந்ததை அப்பெண் கேட்க, மாணவி நடந்தவற்றை கண்ணீல் மல்க கூறியிருக்கிறார். வீட்டிற்கு வரும் ஆட்டோ டிரைவர் தான் தன் கர்ப்பத்திற்கு காரணம் என்றும் வீட்டில் ஆட்கள் இல்லாத பல நேரத்தில் தன்னை மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளியே சொன்னால் வீட்டில் உள்ளவர்களை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாவும் மாணவி கூறியிருக்கிறார். அதனால் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து அவ்விஷயத்தை மறைத்து விட்டதாகவும் மாணவி கண்ணீர் பொங்க கூறியிருக்கிறார்.

இதனைடுத்து மாணவியின் தாயார் இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விஜயனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: நவீண், செய்தியாளர்