நீட் மருத்துவ கலந்தாய்வில் 16 பேர் போலி இருப்பிட சான்று கொடுத்து சீட் வாங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக மருத்துவ கலந்தாய்வு சேர்க்கை செயலாளர் செல்வராஜ் கூறியுள்ளார்.
3 பேர் கலந்தாய்வுக்கு முன்னரே கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி விசாரித்து வருவதாகவும் முறைகேடு செய்தது தெரியவந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே தமிழக மருத்துவ கலந்தாய்வில் போலி இருப்பிடச்சான்று மூலம் புதுச்சேரி மாணவர்களும் கலந்து கொண்டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் விக்னய்யா சார்பில் அவரது தந்தை தீனதயாளன் இந்த புகாரை அளித்துள்ளார். இதுபோல ஏராளமான மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று வழங்கி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றுள்ளதால் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.