சென்னையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரிப்பில் ஈடுபட்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மனைவி தேவிகா. இவருக்குச் சொந்தமாக சென்னை புத்தகரம் பெருமாள் நகர் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்புடைய 2,373 சதுர அடி நிலம் உள்ளது. இந்நிலையில் இவரது காலி நிலத்தை போலியான ஆவணங்கள் மற்றும் போலியான அடையாள அட்டைகள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக தேவிகா சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரிள் அடிப்படையில் இந்த வழக்கு மத்திய நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசாரின் விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த வசந்தகுமார் (35) மற்றும் அண்ணாதுரை (54) ஆகிய இருவரும் ஆள்மாறாட்டம் செய்து தேவிகா என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வேறு ஒரு நபருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மூலம் 10 லட்சம் ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார், ஆள் மாறாட்டம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.