குற்றம்

போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் - சட்டவிரோதமாக பார் நடத்துபவர் தலைமறைவு

webteam

அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்தியகண்ணன் என்பவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை அமைந்தகரை என் எஸ் கே நகர் பேருந்து நிறுத்தம் அருகில்  முதியவர் ஒருவர் குடிபோதையில் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதைக்கண்ட காவலர் முத்துச்செல்வம் முதியவரை அங்கிருந்து நகர சொன்ன போது முதியவர் கேட்கவில்லை. முதியவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக காவலர் முத்து செல்வம் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்க செல்போனை எடுத்தார்.

அப்போது ஒரு காரில் இருந்து இறங்கி வந்த கண்ணன் என்பவர் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த முதியவரை விட்டுவிட்டு காவலர் முத்து செல்வத்துடன் தகறாரில் ஈடுபட்டதுடன் அவரை  சரமாரியாக தாக்கியுள்ளார்.  மேலும் , காவலர் என்ற மரியாதையும் தராமல், “போலீஸ் என்றால் பெரிய இதுவா”  போன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக காவலர் முத்து செல்வம் அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 ஆபாசமாக பேசுதல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் 323 காயங்களை விளைவித்தல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வருகின்றனர். கண்ணன் அந்த பகுதியில் சட்டவிரோதமாக பார் நடத்துவதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் விசாரணையில் அவர் திமுக இலக்கிய அணி மாவட்ட துணை செயலாளராக இருப்பது தெரியவந்த்து.