தென்னிந்தியாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர்களின் புகைப்படத்தை ஆந்திர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் கடந்த 2ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து 22 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்துள்ளது. அந்த கும்பல் தென்னிந்தியாவில் முகாமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் மட்டும் 22 இடங்களிலும், ஆந்திராவில் 2 இடங்களிலும், அதேபோல், கேரளாவிலும் இந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. அப்போது ஏடிஎம் மையங்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களின் புகைப்படத்தை ஆந்திரா காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் 94407 96738 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.