சென்னை ஏடிஎம் ஒன்றில் கண்காணிப்பு கேமிராவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் சி.டி.எச் சாலையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம் மையதில் காவலர்கள் இல்லாததால் ஏ.டி.எம் மையத்தில் நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமிராவை உடைத்துவிட்டு இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் இயந்திரத்தை நீண்ட நேரமாகியும் கழற்ற முடியாததால் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் காலை வழக்கம்போல் ரோந்து வந்த காவல்துறையினர் வங்கி ஏடிஎம் கண்காணிப்பு கேமிரா உடைந்து இருப்பதை கண்டனர். அதனைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் 15 லட்சம் வரை பணம் இருந்தாக கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் இயந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. கொள்ளையர்களை பிடிக்க வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் ஏடிஎம்-ன் முன்பக்க கேமிராவை கொள்ளையர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல் உள்ளே இருந்த மற்றொரு கேமிரா செயலிழந்துள்ளதால் கொள்ளையடிக்க வந்தது யார் என்பது குறித்த விவரம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.