குற்றம்

சிகரம் தொடு பட பாணியில் தொடரும் ஏடிஎம் கொள்ளை !

சிகரம் தொடு பட பாணியில் தொடரும் ஏடிஎம் கொள்ளை !

webteam

இரும்புத்திரை, சிகரம் தொடு படங்கள் பாணியில் கோவையில் தொடரும் ஸ்கிம்மர் மோசடிகள், அச்சத்தில் பொதுமக்கள். கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை. 

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் இருந்து அதிகாலை ரூ.40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்மந்தப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கும், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, இதேபோல் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள்  சிலர் மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. 

புகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்ததில்,  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜ் சாலையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏடிஎம்மில் கடந்த 2ஆம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பதும், அவர்கள் வங்கி கணக்கில் இருந்து  பணம்  எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. உடனே,  சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரும்  சைபர் கிரைம் காவல்துறையினர், புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் மூடினர்.

10க்குட்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.40,000 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஸ்கிம்மர் கருவியை கொண்டு ஏ.டி.எம்.மில்லும், பெட்ரோல் பங்கிலும் இருந்து பணம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதேபோல் நடந்துள்ளதா என்பது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வங்கிகள் ஏ.டி.எம்.களிலிருந்து திருடப்படும் தகவல்களை தடுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.