திருவண்ணாமலையில் உள்ள கனராவங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை கொசமடத்தெருவில் கனரா வங்கி பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இவ்வங்கியின் நுழைவு வாயில் அருகே 24-மணிநேரமும் இயங்கும் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஏ.டி.எம்-ல் நுழைந்த மர்ம நபர் இயந்திரத்தை கல்லால் உடைத்து ஏ.டி.எம். இருந்த பணத்ததை திருட முயற்சி செய்து தோல்வி அடைந்தார். வழக்கம் போல காலை வங்கி வந்த ஊழியர்கள் ஏ.டி.எம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல்துறையினர், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தீவிரமாக தேடிவருகின்றனர். இதனால் ஏ.டி.எம்-ல் இருந்த ரூ.35 லட்சம் கொள்ளை போகாமல் தப்பியது.