குற்றம்

‘ஸ்கிம்மர் மிஷன்’ மூலம் நடக்கும் திருட்டு... உஷாராக ஏடிஎம் ஷட்டரை மூடிய பொதுமக்கள்..!

‘ஸ்கிம்மர் மிஷன்’ மூலம் நடக்கும் திருட்டு... உஷாராக ஏடிஎம் ஷட்டரை மூடிய பொதுமக்கள்..!

Rasus

‘ஸ்கிம்மர் மிஷன்’ பொருத்தி ஏடிஎம்மில் தகவலை திருடி கொள்ளையடிக்கும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சுல்தான்(51). மற்றும் சுலைமான் (49). இவர்கள் இருவரும் சென்னை தாம்பரம் காந்திசிலை அருகே உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் ஒன்றில் பணம் எடுப்பதற்காக உள்ளே செல்வதுபோல் சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் வெளியேவராமல் உள்ளே ஏதோ செய்வதுபோல் செய்துகொண்டிருந்தனர். வெளியில் பணம் எடுக்க காத்திருந்த மற்ற மக்களுக்கு இவர்கள் இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் பணம் எடுக்காமல் வேறு ஏதோ செயலில் ஈடுபட்டதால் மக்கள் சந்தேகமடைந்து அவர்கள் வெளியே தப்பிவிட முடியாமல் ஏடிஎம் ஷட்டரை மூடினர். பின்னர் தாம்பரம் போலீசாருக்கு இதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்குவந்த தாம்பரம் போலீசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் மிஷன் பொருத்தி அதன்மூலம் தகவலை திருடி கொள்ளையில் ஈடுபட்டது வந்தது தெரியவந்துள்ளது.

ஆக்சிஸ் வங்கியின் மாடம்பாக்கம், சேலையூர், தாம்பரம் போன்ற கிளைகளில் அவர்கள் ஸ்கிம்மர் மிஷினை பொருத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குபின் திருட்டிற்கு பயன்படுத்திய இயந்திரங்கள் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்படும்.

கொள்ளை நடப்பது எப்படி?

ஏடிஎம்மில் நாம் பணம் எடுக்க வேண்டும் என்றாலே, அல்லது வங்கி இருப்பை தெரிந்துகொள்ளவோ எது செய்ய வேண்டுமென்றாலும் ஏடிஎம்மில் முதலில் நம் ஏடிஎம் அட்டையை நுழைக்க வேண்டும். எனவே ஏடிஎம் அட்டையை உள்ளே செலுத்துவற்காக ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திலும் பிரத்யேக இடம் இருக்கும். அந்த இடத்தில் கொள்ளையர்கள் ஸ்கிம்மர் மிஷனை பொருத்திவைத்து விடுவார்கள். அதனை பொதுமக்களால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்கவும் முடியாது. நாம் அது தெரியாமல் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்க ஏடிஎம் கார்டை உள்ளே நுழைக்கும்போது நம்முடைய தகவல்கள் அந்த ஸ்கிம்மர் மிஷினில் பதிவாகிவிடும். பின்னர் கொள்ளையர்கள் ஸ்கிம்மர் மிஷனை யாரும் இல்லாத நேரத்தில் வெளியே எடுத்துவிட்டு அதில் பதிந்திருக்கும் தகவல் மூலம் எளிமையாக போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்துவிடுவார்கள். நம்முடைய ‘ஏடிஎம் பின்’ போன்ற விவரங்களும் அந்த ஸ்கிம்மர் மிஷினில் பதிவாகியிருப்தால் எளிதாக போலி ஏடிஎம் அட்டையை கொண்டே அவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.