டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் மகள் என மொத்தம் மூவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகரையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூவர் கொலை குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். என்ன நடந்தது பார்க்கலாம்...
தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் உள்ள தியோல் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜேஷ் (55) என்பவர் தனது மனைவி கோமல் (47) மற்றும் மகள் கவிதா (23) மகன் (பெயர் தெரியவில்லை) உடன் வசித்து வந்தார். இன்று ராஜேஷ் ,கோமல் தம்பதியின் திருமணநாள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜேஷின் மகன் அதிகாலை 5:00 மணியளவில் தனது தாய் தந்தைக்கு திருமண வாழ்த்தைக்கூறிவிட்டு காலை நடைபயிற்சிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. நடைப்பயிற்சி முடிந்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது பெற்றோர் மற்றும் சகோதரி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த வழக்கில் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குற்றவியல் குழு மற்றும் தடயவியல் குழுக்கள் கொலைக்காண காரணத்தை சேகரித்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த சமயம் வீட்டில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் பொருட்கள் ஏதும் கீழே விழவில்லை என்றும் எந்த திருட்டும், கொள்ளையும் செய்யப்படவில்லை என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் நடந்த இந்த கொலைக்குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில், "நெப் சராய் பகுதியில் இன்று காலை ஒரே வீட்டில் மூன்று கொலைகள் நடந்துள்ளது... இது மிகவும் வேதனையானது மற்றும் அச்சமூட்டக்கூடியது. ஒவ்வொரு நாளும், டெல்லிவாசிகள் இதுபோன்ற பயமுறுத்தும் செய்திகளால் விழித்தெழுகின்றனர்.
குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வீடுகள் அழிக்கப்படுகின்றன, அப்பாவிகள் உயிர்கள் இழக்கப்படுகின்றன, பொறுப்புள்ளவர்கள் இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தனது X இல் பதிவிட்டார்.
அதேபோல், டெல்லி முதலமைச்சர் அதிஷி இதுகுறித்து கூறுகையில், “இன்று காலை நெப் சராய் என்ற இடத்தில் மூன்று கொலைகள் நடந்தேறியுள்ளன. டெல்லியில் பட்டப்பகலில் கொலைகள் நடக்கின்றன, தோட்டாக்கள் சுடப்படுகின்றன, போதைப்பொருட்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. டெல்லியில் மத்திய அரசுக்கு ஒரே ஒரு பொறுப்பு - டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது தான். ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்பில் முற்றிலும் தவறிவிட்டனர்” என்றார்.