குற்றம்

அரும்பாக்கம்: தங்கம் திருடியதாக குருவியை சிக்க வைத்த காவலர் உட்பட 3 பேர் கைது.!

webteam

அரும்பாக்கத்தில் 400 கிராம் தங்கத்தை திருடிவிட்டதாக குருவியை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் ஏற்பட்ட திருப்பத்தின்பேரில் காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் இயங்கி வரக்கூடிய தனியார் விடுதியில் இருந்து கடந்த 10ஆம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் தங்கள் விடுதியின் அறைகளில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாகவும், ஏதோ அசாம்பாவிதம் நடைபெறுவதாகவும் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தனியார் விடுதிக்கு சென்ற அரும்பாக்கம் போலீசார், விடுதி ஊழியர்கள் காட்டிய இரு அறைகளை உடைத்து பார்த்த போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று 3 பேரை அடைத்து வைத்து மிரட்டி தாக்கி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் ராஜ் என்பதும், இவர் 30 ஆயிரம் பணத்திற்காக குருவியாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் ஹசன் பாஷா என்பவர் கொடுத்த 400கிராமுக்கு அதிகமான தங்கத்தை துபாயில் இருந்து மைக்ரோ ஓவன் மூலமாக மறைத்து விமானத்தில் கடந்த 7ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வந்ததும், பின் அங்கிருந்து தங்கத்தை திருடும் நோக்கில் நண்பரான விமல் மற்றும் தனது உறவினர்களுடன் அடையாறு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று மைக்ரோ ஓவனை பிரித்து பார்த்த போது தங்கம் இல்லாததால் அங்கேயே போட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி ஆனந்த் ராஜ் வீட்டில் இருந்த போது ஒரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரையும், அவரது உறவினர்களான ராம், ஹாம் ஆகியோரை கடத்திசென்று தங்கம் கேட்டு தாக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அப்போது தான் அரும்பாக்கத்தில் வைத்து லாட்ஜில் தங்கம் கேட்டு தாக்கி வந்த போது போலீசார் மீட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். பின்னர் அரும்பாக்கம் போலீசார், கடத்திவந்து தாக்கிய குற்றத்திற்காக இதயத்துல்லா, ரவிகுமார், பாலகன், தினேஷ் மற்றும் நவீன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மைக்ரோ ஓவனில் கொண்டு வந்த தங்கத்தை விமல் என்பவர் திருடி விட்டதாக பாதிக்கப்பட்ட ஆனந்தராஜ் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது கிண்டியை சேர்ந்த விமல், வினோத், ஸ்ரீதர் ஆகிய மூன்று பேரை கைது செய்து 10 லட்சம் பணம் மற்றும் திருடிய தங்கத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களுள் விமல் என்பவர் மவுண்ட் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

மேலும் விமானம் மூலமாக குருவிகள் தங்கத்தை கடத்தி வரும் போது, சென்னை விமான நிலையத்தில் விமல் காத்திருந்து போலீஸ் எனக்கூறி சோதனை செய்யவிடாமல் குருவிகளை வெளியே அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதே போல ஆனந்த ராஜ் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கு அழைத்து சென்று மைக்ரோ ஓவனில் இருந்த தங்கத்தை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு உதவியாக வினோத் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரையும், கைது செய்யப்பட்ட காவலர் உட்பட மூவரையும் அரும்பாக்கம் போலீசார் சிறையில் அடைத்தனர்.