குற்றம்

போலீசாருக்கு போக்கு காட்டிய வடமாநில கும்பல் கைது: மாடுகளை திருடியது ஏன்? -அதிர்ச்சி தகவல்

webteam

மதுரையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் பசுக்களை வாகனங்களில் கடத்திச் சென்ற வடமாநில கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசு மாடுகளை மினி லாரிகளில் கடத்திச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது இந்நிலையில், அதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை பகுதிகளில் வாகன சோதனையை காவல் துறையினர் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவு கூடல்புதூர் சோதனை சாவடியில் மாடுகளை கடத்தி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்துவதற்காக காவல் உதவி ஆய்வாளர் தவமணி, இரும்பு பேரிகார்டை நடுரோட்டிற்கு இழுத்து தடுக்க முயன்றார் அப்போது, வாகனத்தில் வந்த கும்பல் அதிவேகமாக வந்து பேரிகார்டரில் மோதி நிற்காமல் சென்று விட்டனர். இதில் எஸ்.ஐ. தவமணியின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கூடல் புதூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். வாகனம் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விபத்து ஏற்படுத்திய அன்று மதுரையில் பல்வேறு பகுதிகளில் மாடு திருடு போனதாக புகார் எழுந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், பரவை சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவையும் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தாராபுரம் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், பதுங்கி இருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாகுல், சுபீர், நாசிர், இர்பான், ஹக்முதீன் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளையும், வீட்டிற்கு வெளியே கட்டியிருந்த ஜல்லிக்கட்டு காளைகளையும் திருடி கேரள வியாபாரிகளிடம் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் மாடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய இரண்டு டிரக் வாகனங்கள், 11,140 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநிலத்தில் இருந்து கும்பல், கும்பலாக தமிழகத்தை நோக்கி வரும் நபர்கள் செய்யும் திருட்டு வேலையால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதோடு, கடந்த ஒருமாத காலமாக போக்கு காட்டிய மர்ம கும்பலை பிடித்ததுள்ளதால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர்.