அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் வசித்து வரும் ஜான், கௌதம், ராமநாதன் மற்றும் கவிமணி ஆகியோர் அடிதடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதேபோல் உடையார்பாளையம் தாலுகா, தேவமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் அசோக்குமார் என்பவர் 14 வயது சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயங்கொண்டம் கடை வீதியை சேர்ந்த பக்ருதீன் என்பவர் கடந்த மாதம் மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழ புரத்தில் விவசாயியிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து ஆடு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் மேலவண்ணம் கிராமத்தில் வசித்து வரும் பழனிவேல் என்பவர் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரை குடிபோதையில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட குற்றவாளிகள் 7 பேரும் வெளியே இருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் 7 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டார்.
இதனையடுத்து அரியலூர் காவல்துறையினர் குற்றவாளிகள் ஏற்கெனவே அடைக்கப்பட்டிருக்கும் திருச்சி மத்திய சிறைத்துறை காவல் அதிகாரிகளிடம் குண்டர் சட்டத்திற்கான ஆணையை ஒப்படைத்தனர்.