குற்றம்

”பணம் தரலனா தமிழ்நாடே பற்றி எரியும்” - பள்ளி தாளாளரை மிரட்டிய அரியலூர் VHP நிர்வாகி கைது!

webteam

அரியலூரில் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான புகாரில் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷ் மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் முத்துவேல். இவர், அரியலூர் மாணவி லாவண்யா, தான் படித்து வந்த தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரபலமானவர். இந்த நிலையில், அரியலூர் நகரில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் டோமினிக் சாவியோ என்பவர் சமீபத்தில் நகர அரியலூர் நகர காவல் துறையினரிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். முத்துவேலின் தூண்டுதலின்படி என்னிடம் வந்த விக்னேஷ் தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும், 25 லட்சம் பணம் கேட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

அந்த புகாரில் அளித்த தகவலின்படி,

விக்னேஷ் என்பவர் தாளாளர் டோமினிக் சாவியோவின் கீழ் பணியாற்றி வருகிறார். (இருவருக்கும் இடையே ஏதோ மனஷ்தாபம் இருந்ததாக கூறப்படுகிறது) அதேபோல், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி முத்துவேல், விக்னேஷ்க்கு நண்பர். 

அந்த புகாரில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியலூரைச் சேர்ந்த வினோத் என்பவர் என்னை சந்தித்தார். அப்போது, விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முத்துவேல் பெயரைச் சொல்லி மிரட்டினார். என்னிடம் ரூ25 லட்சம் பணம் கேட்டார். பணம் தராவிட்டால் மாணவி லாவண்யா மரண விவகாரத்தில் தன்னை இணைத்து அவதூறுகளை பரப்பிவிடுவோம் என்று மிரட்டினார். இந்த விவகாரத்தால் தமிழ்நாடு பெரிய அளவில் பத்திக்கொண்டு எரியும் என்று சொன்னதோடு, என் மீது கற்பழிப்பு ,வன்கொடுமை போன்ற குற்றங்களை சுமத்திவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்.

மேலும், அவர் “ இவர்கள் பேசி உள்ள விஷயம் அரியலூர் இந்து கிறிஸ்துவ மக்கள் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இதனை வைத்து கலவரம் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். மேலும்  கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இவர்கள்  பேசி உள்ளார்கள் . ஆகவே மேற்கண்ட எதிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என டோமினிக் சாவியோ கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் முத்துவேல் மீது மதகலவரத்தை தூண்டுதல் ஆளை மிரட்டி‌பணம் பறிப்பது, மக்களை திசை திருப்புது, மதகலவரத்தால் லாபம் அடைவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக முத்துவேல் வினோத்திடம் பேசிய ஆடியோவையும் போலீசார் ரிலீஸ் செய்தனர்.