தாக்கப்பட்ட ஆற்காடு மீனவர்கள்
தாக்கப்பட்ட ஆற்காடு மீனவர்கள் புதியதலைமுறை
குற்றம்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஆற்காடு மீனவர்கள்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

PT WEB

இலங்கை கடற்கொள்ளையர்களால் நடுக்கடலில் வைத்து ஆற்காடு மீனவர்கள் தாக்கபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் காயமடந்த 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கொள்ளையர்களின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட ஆற்காடு மீனவர்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆற்காட்டை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்களும், செந்தில் அரசன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் 3 மீனவர்களும், சிவபாலன் என்பவரின் படகில் 4 மீனவர்களும் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆற்காட்டிலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் ஆற்காட்டு துறையிலிருந்து கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் நேற்று இரவு 7 மணி அளவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கே வீச்சருவாள், கட்டை, கம்பி போன்ற கடுமையான ஆயுதங்களை கொண்டு அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட 3 படகுகளில் இலங்கையை சேர்ந்த தமிழ்பேசும் 9 கடல் கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த ஆற்காடு மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாஸ்கர் என்பவரின் படகில் இருந்த செல்போன், ஜிபிஎஸ் கருவி, 20 கிலோ மீன் பிடிக்கும் கயிறு போன்றவற்றையும் செந்தில் அரசன் படகில் இருந்த செல்போன், ஜிபிஎஸ், டார்ச் லைட், 800 கிலோ மீன்பிடி வலை போன்றவற்றையும், வெள்ளி அருணாக்கொடி, பவுன் மோதிரம் ஆகியவற்றையும், சிவபாலன் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் எடுத்துச்சென்றுள்ளனர். மொத்தமாக 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துக்கொண்டது மட்டுமல்லாது அம்மீனவர்களையும் தாக்கி சென்றுள்ளனர்.

பொருள்களை பறிகொடுத்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தலையில் காயமடந்த மீனவர்கள் பாஸ்கர், அல்ராஜ் போன்றவர்கள் நாகை அரசு மருத்துவமனையிலும், சவுக்கு மரக்கட்டையால் தாக்கியதில் காயமடந்த செந்தில் அரசன், மருது, வினோத்,வெற்றிவேல் ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்கப்பட்ட ஆற்காடு மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

இது குறித்து கடலோர காவல் குழும போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு மீனவ மக்களிடையே இச்சம்பவம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடலோர மீனவ கிராமங்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் மீனவர்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் கடலில் மீன் பிடிக்க மத்திய , மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தற்காலிக தீர்வாக இல்லாமல் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

- ஜெனிட்டா ரோஸ்லின் . S