குற்றம்

மதம் மாறி காதல்: கூலிப்படை மூலம் அர்பாஸை கொன்ற காதலியின் பெற்றோர் - கர்நாடகா காவல்துறை

Veeramani

கர்நாடகாவில் தலை துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட அர்பாஸின் கொலைக்கு காரணமான அவரின் காதலியின் பெற்றோர் மற்றும் இந்து அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி ரயில் தண்டவாளத்தில் 24 வயதான அர்பாஸ் அஃதாப்பின் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையில் தொடர்புடையவர்களை தற்போது கர்நாடக காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்ததால் அர்பாஸ் தனது காதலியின் பெற்றோர்கள் மூலமாக கூலிப்படையினரால் கொல்லப்பட்டதாக காவல்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.  இந்த கொலைவழக்கில் அர்பாஸின் காதலியின் தந்தை ஈரப்பா மற்றும் தாய் சுசீலா கும்பர் ஆகியோரையும், அர்பாஸைக் கொன்ற கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீ ராம் சேனா ஹிந்துஸ்தான் என்ற இந்து அமைப்பின் தாலுகா தலைவர் புண்டலிக் முட்கேகர்  உள்ளிட்ட பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கானாபுரத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு, அவரின் தந்தை ஈரப்பா அர்பாஸை அழைத்ததாகவும், அந்த பெண்ணை விட்டு பிரிந்து செல்ல அர்பாஸ் மறுத்ததால், அவரை குத்திக் கொன்றதாகவும் புண்டலிக் போலீசில் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அவர்கள் அவரது தலையை வெட்டி சான்றுகளை அழிப்பதற்காக ரயில் பாதையில் தூக்கியெறிந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.