கோழி இறைச்சி மூலம் விஷம் வைத்து சுமார் 10 நாய்கள் வரை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆரணியில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரி அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி விளை நிலங்கள் உள்ளன. இந்த விவசாய விளை நிலங்கள் சுற்றி நாய்கள் சுற்றி திரிவது வழக்கம். ஆனால் தற்போது இரவு நேரங்களில் இந்த விவசாய நிலத்தின் அருகில் உள்ள இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன.
இந்நிலையில் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து குடிமகன்கள் விவசாய நிலத்தை சேதபடுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர். இந்த செயல்களுக்கு நாய்களால் தொந்தரவு ஏற்படுவதால், கோழி இறைச்சியில் தடை செய்யப்பட்ட விஷத்தை கலந்து நாய்களுக்கு உணவாக அளித்துள்ளனர்.
இதனால் விஷமுள்ள கோழி இறைச்சியை உண்ட நாய்கள் இறந்து விட்டிருக்கின்றன. இச்சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.
இந்நிலையில் விவசாய நிலத்தை சேதபடுத்தியும், நாய்களுக்கு விஷம் வைத்தும் கொன்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.