குற்றம்

கேரளாவில் மீண்டுமொரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை: வலுக்கும் போராட்டம்

கேரளாவில் மீண்டுமொரு இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை: வலுக்கும் போராட்டம்

webteam

கேரளாவில் வரதட்சணை கொடுமையல் மீண்டும் ஒரு இளம் பெண் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக, காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் போராட்டம் செய்துவருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தண்ணீர் பீச்சி அடித்தும் புகைகுண்டு வீசி கலைத்து விட முயற்சி செய்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியை சேர்ந்த மோபியா என்ற சட்டக்கல்வி பயின்ற பட்டதாரி இளம் பெண், ஜில்ஷாத் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்திருந்திருக்கிறார். அதன்பிறகு ஏற்பட்ட வரதட்சணை கொடுமைகள் காரணமாக, சுமார் 25 நாட்களுக்கு முன்பு ஆலுவா காவல் நிலையத்தில் மோபியா புகாரொன்று அளித்திருக்கிறார். அதில் கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தன்னை மிரட்டுவதாக மோபியா குறிப்பிட்டு, அவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் காவல்நிலைய ஆய்வாளர் சுதீர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 23-ம் தேதி, மோபியா தனது தந்தையுடன் காவல்நிலையத்தில் சென்று தனது புகாருக்கான நடவடிக்கை குறித்து ஆய்வாளரிடம் விசாரித்திருந்திருக்கிறார். அதற்கு அந்த ஆய்வாளர், மோபியாவையும் அவருடைய தந்தையையும் மரியாதையின்றி பேசி உள்ளார். அதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய மோபியா, தனது அறையை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோபியாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டு போராட்டங்கள் நடந்துவருகிறது.

அதனொரு பகுதியாக, இன்று ஆலுவா காவல்நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை கலைத்து விட போலீசார் தண்ணீர் பீரங்கியால் தண்ணீரை பீச்சி அடித்தும் கண்ணீர் வெடிகுண்டுகளையும் வீசினர். அப்போது அங்கங்காக பிரிந்து சென்ற போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டு போரட்டத்தில் ஒன்றிணைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

- செய்தியாளர்: மனு