குற்றம்

"நான் சாமியார் இல்லை; ஆன்மிக பயிற்சி மட்டுமே என் பணி”- அன்னபூரணி அரசு பேட்டி

"நான் சாமியார் இல்லை; ஆன்மிக பயிற்சி மட்டுமே என் பணி”- அன்னபூரணி அரசு பேட்டி

நிவேதா ஜெகராஜா

தன்னை பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி, சமூகவலைதளங்களில் சாமியார்போல வீடியோக்கள் வெளியிட்டு வந்த அன்னபூரணி என்பவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின்னர், "நான் சாமியார் இல்லை, ஆன்மிக பயிற்சியே அளித்து வருகிறேன்" என்று செய்தியாளர் மத்தியில் கூறியுள்ளார்.

சமீபத்தில் சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் நபராக உள்ளார் அன்னபூரணி அரசு என்ற பெண். தன்னை அம்மனின் அவதாரமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு வரும் இவர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றை குறிப்பிட்டு, இவர் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலும் இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும் செயல்படுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாக, அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து அமைப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை அன்னபூரணி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சென்று தன் தொடர்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், "நான், ‘இயற்கை ஒலி’ என்ற பெயரில் ஆன்மிக தீட்சை கொடுத்து, ஆன்மிக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். கடந்த 19-12-2021 அன்று செங்கல்பட்டில் ஆன்மிக பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 24-12-2021 அன்று என்னையும் எனது ஆன்மிக சேவையையும் தவறாக சித்தரித்து யூட்யூப் சேனலொன்றில் வதந்தி பரப்பட்டது.

மேலும் எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம், இறப்பில் சந்தேகம் என தவறாக வதந்தி பரப்புகிறார்கள். அதை தொடர்ந்து பல்வேறு யூட்யூப் சேனல்களும் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தொடர்ந்து என் மீதும் எனது ஆன்மிக சேவை மீதும் எனது சீடர்கள் குறிந்தும் கொச்சைப்படுத்தி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

இது எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. பலர் எனக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். ‘நீ ஆன்மிக சேவையில் ஈடுபடக் கூடாது’ என்றும், ‘மீறி செயல்பட்டால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்றும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ்அப் மூலமும் மிரட்டல்கள் வருகிறது. இதனால் எனது ஆன்மிக சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனக்கும் எனது சீடர்கள் உயிருக்கும் எந்நேரமும் அச்சுறுத்தலும் ஆபத்தும் இருந்து வருகிறது. எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த அன்னபூரணி செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது, "என்னை பற்றி தவறான தகவல்கள், அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை போலி சாமியார், சாமியார் போன்ற தேவையில்லாத விஷயங்களை அவதூறாக பரப்புகிறார்கள். நான் ஆன்மிக பணி செய்யவே வந்துள்ளேன். என்னுடைய வேலையும் அது தான். ஆன்மிக பயிற்சி கொடுத்து தீக்சை கொடுத்து வருகிறேன். என்னிடம் ஆன்மிக பயிற்சி எடுத்தவர்களுக்கு என்னை பற்றி தெரியும். என்னை பற்றி உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும். என்னை பார்த்தவர்களுக்கு தெரியாது.

நான் என்னை சாமியார் எனக் கூறிவில்லை. நான் தலைமறைவு என அவதூறு பரப்புகிறார்கள். என் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. காவல்துறையிடம் எதுவும் விசாரிக்க அழைக்கவில்லை. நான் திடீரென வரவில்லை. உங்களுக்கு தான் அப்படி தெரிகிறது. கடந்த 6 ஆண்டுகளாக நான் ஆன்மிக பயிற்சி கொடுத்து வருகிறேன். நான் ஆதிபராசக்தி எனக் கூறவில்லை. நான் கடவுள் அவதாரம் என என்றைக்கும் கூறியதில்லை. என்னிடம் ஆன்மிக பயிற்சி எடுத்தவர்கள் என்னை உணர்ந்தவர்கள் தான் கடவுள் என்ற வார்த்தையை சொல்கிறார்கள்.

என்னுடைய ஆன்மிக பணி தொடர்ந்து நடைபெறும். நான் எந்த அருள் வாக்கும் கொடுக்கவில்லை. மாறாக ஆன்மிகம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, நீங்கள் யார், எதற்காக இங்கு வந்துள்ளீர்கள், எந்த சக்தி உங்களை இயக்குகிறது போன்றவற்றை உங்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இனியும் எனது இந்த ஆன்மி பணியை தொடர்ந்து செய்வேன். நான் சொல்லவேண்டியவற்றை தெரிவித்து விட்டேன். இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம் தான் வெல்லும்" என்றார்.

தொடர்ந்து அன்னபூரணியின் கணவரென குறிப்பிடப்படும் அரசு குறித்தும் பிற விஷயங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அவர் அவற்றுக்கு மலுப்பலான பதிலை கூறிவிட்டு அன்னபூரணி கிளம்பிவிட்டார்.

- சுப்பிரமணியன்