ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் அமலாபுரம் என்ற இடத்தில், கோடா ஹரிகிருஷ்ணா (25) என்பவர், காதல் விவகாரத்தில் பெண் ஒருவரை கொலை செய்து கைதாகியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அவர் கொலை செய்வதாக நினைத்த பெண் அவர் இல்லை. போதையில் பெண்ணையே மாற்றி கொலை செய்திருக்கிறார்.
அன்றாடம் பெண்களுக்கு எதிரான கொடூரமான கொலைகுற்றங்கள் பற்றிய செய்திகளை நாம் கடந்துகொண்டேதான் இருக்கிறோம். அவை ஒவ்வொன்றுமே நம்மை ஒருவித பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையே. அதேநேரம் குற்றங்கள் உண்மையிலேயே குறைந்து வருகிறதா என்ற அச்சத்தை ஒவ்வொரு குற்றமும் மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகிறது. அப்படியொரு கொடூர குற்றம்தான், ஆந்திராவில் சமீபத்தில் நடந்திருக்கிறது.
சம்பவத்தின்படி ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணா என்பவர், ஏப்ரல் 4-ம் தேதி அமலாபுரம் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். தன் காதலை நிராகரித்த பெண்ணை கொலை செய்யவேண்டுமென்ற நோக்கில் ஹரிகிருஷ்ணா சென்றிருக்கிறார். அப்பெண்ணும் ஹரிகிருஷ்ணாவும் ஆன்லைன் மூலம் கடந்த 5 மாதங்களாக பழகிவந்த நிலையில், ஒருகட்டத்தில் ஹரிகிருஷ்ணா அவரிடம் காதலை தெரிவித்திருக்கிறார். அதை ஏற்க மறுத்த அப்பெண் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். திருமணம் ஆனதை சொன்ன பிறகும் ஹரிகிருஷ்ணா திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவே அவருடன் பேசுவதையும் அந்தப் பெண் நிறுத்தியுள்ளார். இதனால் ஹரிகிருஷ்ணா, அப்பெண் மீது ஆவேசம் கொண்டு அவரை கொலை செய்யும் நோக்கில் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
தாங்கள் பழகிய நாட்களில், அப்பெண் கொடுத்த முகவரியை வைத்து சம்பவ இடத்துக்கு ஹரிகிருஷ்ணா சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த முகவரிக்கு சென்ற ஹரிகிருஷ்ணா, அப்போது மதுபோதையில் இருந்ததாக தெரியும் நிலையில், நிதானமின்றி அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக கத்தியில் குத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட பெண்ணின் அம்மா மற்றும் அவர் வீட்டில் பணிபுரிந்தவரான ஸ்ரீதேவி (35) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் அந்த பணிப்பெண் சம்பவ இடத்திலேயே மரணித்திருக்கிறார். இருவரின் அலறல் சத்தத்தையும் கேட்டு, அக்கம்பக்கத்தினர் சென்று அவர்களை மீட்க முயன்றுள்ளனர். தொடர்ந்து காவல்துறைக்கும் அவர்கள் தகவலை தெரிவிக்கவே, அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அமலாபுரம் டி.எஸ்.பி மாதவ ரெட்டி அங்குள்ள ஊடகங்களுக்கு கூறுகையில், “ஹரிகிருஷ்ணா, அந்த வீட்டுப்பெண்ணை கொலை செய்யும் நோக்கில் சென்றிருக்கிறார். அப்போது ஆள்மாறி அந்த வீட்டின் பணிப்பெண்ணை கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீதேவி” என்றுள்ளார். மேற்கொண்டு வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.