குற்றம்

ஆந்திரா டூ கேரளா: லாரியில் கடத்தப்பட்ட 1200 கிலோ கஞ்சா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு?

webteam

ஆந்திராவில் இருந்து தேனி வழியாக கேரளாவிற்கு கடத்த இருந்த 1200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட மூவரை ஐஜி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து லாரி மூலமாக கஞ்சா கடத்தி வருவதாக ஐஜி தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஜஜி தனிப்படை காவல்துறை சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான காவல் துறையினர் ஆண்டிபட்டி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட பதிவெண் கொண்ட லாரியை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் லாரியில் பதிக்க வைத்திருந்த 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், கஞ்சாவை கடத்திவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ், சின்னச்சாமி, அபூபக்கர் சித்திக் ஆகிய மூவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்திக் செல்ல இருந்தது தெரியவந்தது.இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்கள் யார்? இத்தனை அதிக அளவிலான கஞ்சாவை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி யார்? கஞ்சா விற்பனை கும்பலின் பின்னணி என்ன? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.