இறந்தவர்
இறந்தவர் PT
குற்றம்

’என்ன துர்நாற்றம் வீசுது’-தாயின் சடலத்தை 3 மாதங்களாக மறைத்த மகன்..பென்ஷன் பணத்திற்காக நிகழ்ந்த சோகம்

PT WEB

ஆந்திர மாநிலம் எலூர் மாவட்டம் தங்கெல்லாமுடி யாதவர்நகர் மகிஷாசுரமர்தானி கோவில் அருகே வசித்து வந்தவர் சரணாரத்தி நாகலட்சுமி (76). இவரது கணவர் மல்லிகார்ஜுன ராவ் விஜயவாடா வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவர் இறந்த பின்னர் நாகலட்சுமிக்கு ஓய்வூதியம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஓய்வூதிய பணத்தில் தனது சொந்த விட்டின் மேல் மாடியில் தனி அறையில் தங்கி வந்தார். வீட்டின் கீழ் பகுதியில் அவரது மகன் துர்கா பசவ பிரசாத் மற்றும் அவரது மனைவி லலிதா தேவியுடன் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக நாகலட்சுமி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அவர் எங்கே என கேட்டதற்கு அக்கம் பக்கத்தினருடன் முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டதாக கூறி உள்ளார். இந்நிலையில், நாகலட்சுமி தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கேட்டபோது பூனை இறந்து விட்டதாக கூறிய துர்கா பசவ பிரசாத் அதனை அகற்றுவதாக கூறி வந்துள்ளார்.

ஆனால் வீட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வந்ததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து பார்த்தபோது மூதாட்டி சடலமாக கிடந்தார். இறந்த சடலம் அழுகிய நிலையில் எலும்புகள் தெரியும் விதமாக இருப்பதை பார்த்த போலீசார் நாகலட்சுமி இறந்து மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து உடலை ஏலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகலட்சுமி தனது மகன் பசவ பிரசாத்திடம் சில காலமாக பேசாமல் இருந்ததாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தாயாரின் ஓய்வூதியம் பெற சடலத்தை வீட்டிலேயே மறைத்தாரா, கொலையா, இயற்கை மரணமா என துர்கா பசவ பிரசாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.