ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தனது மனைவியை தம்பெல்லால் அடித்ததை மகள்கள் வீடியோ பதிவு செய்து போலீஸில் கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் நபர் ஒருவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகள்களை அடித்து, பாலியல்ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதுபற்றி இந்திராபாலெம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுக்க சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்களே பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு போலீஸார் திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.
அந்த நபர் வீட்டில் தினமும் மனைவி மற்றும் பிள்ளைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதோடு, வீட்டிலேயே ஆபாசப்படமும் பார்த்துள்ளார். மேலும் வீட்டிற்கு வரும் மகள்களின் தோழிகளிடம் ஆபாசமாக பேசியிருக்கிறார்.
இந்த நிலை தினமும் தொடரவே, செப்டம்பர் 4ஆம் தேதி, அந்த நபர் தனது மனைவியை தம்பெல்லால் அடித்தபோது, அதை அவர் மகள்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதை செப்டம்பர் 5ஆம் தேதி போலீஸில் கொடுத்துள்ளனர். வீடியோ ஆதாரம் இருந்ததால், அந்த நபர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதெரிந்த அந்த நபர் தலைமறைவாகி விட்டார். அவரை துணை காவல் ஆய்வாளர் நாகர்ஜூனா ராஜு தலைமையில், செப்டம்பர் 11ஆம் தேதி தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.
கொலைமுயற்சி, வன்கொடுமை மற்றும் பெண்களை துன்புறுத்தியதற்காக பிரிவு 307, பிரிவு 354-சி மற்றும் பிரிவு 498-ஏ என மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த அந்த நபரின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதுபற்றி மனித உரிமை மன்றத்தின் பொதுச் செயலாளரான் வழக்கறிஞர் கே.சுதா கூறுகையில், ஆரம்பத்திலேயே அந்த நபர்மீது வழக்குப்பதிவு செய்திருந்தால், அந்த பெண் தற்போது எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டிருப்பார். இது பாதிக்கப்பட்ட பெண்களின்மீது போலீஸாருக்கு குறைவான நம்பிக்கை இருப்பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.