ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த கோகாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரி பாபு(21 வயது). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் சட்டி வெங்கட் ரெட்டியின் வீட்டில் பணத்தைத் திருட திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவர் வீட்டில் யார் யார் எந்தெந்த நேரத்திற்கு வந்து போகிறார்கள், எப்போது தூங்கி விழிக்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை நோட்டமிட்டுள்ளார். மேலும் ரெட்டி தினமும் பணத்தைக் கொண்டுவந்து எங்குவைக்கிறார் என்பது போன்ற அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொண்டபின், செப்டம்பர் 12ஆம் தேதி அந்த வீட்டில் திருட திட்டமிட்டுள்ளார்.
அதற்காக பிரத்யேக மாஸ்க்குகளையும் தயாரித்துள்ளார். திட்டமிட்டபடி, அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்குள் திருடச்சென்ற அவருக்கு மிகவும் களைப்பாக இருந்ததால், மேலும் ஏசி காற்றில் களைப்பு அதிகரித்ததால் சிறிது நேரம் படுத்துத் தூங்கிவிட்டுச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்.
அதனால் ரெட்டியின் கட்டிலுக்கு அடியில் படுத்துத் தூங்கிய அவர் 7.30 மணிவரை தூங்கிவிட்டார். சூரியின் குறட்டை சத்தம் கட்டிலுக்கு அடியில் பார்த்த ரெட்டி, அமைதியாக வெளியே சென்று கதவைப் பூட்டிவிட்டு, போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். நிலைமை அறிந்த சூரி அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு திறக்க மறுத்திருக்கிறார்.
போலீஸார் உள்ளே சென்று அவரைப் பிடித்து விசாரித்ததில், மிகவும் களைப்பாக இருந்ததால் ரெட்டி எழுந்திருக்கும் முன்பு எழுந்து சென்றுவிடலாம் என நினைத்து தூங்கியதாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். அவரைப்பற்றி குடும்பத்தாரிடம் விசாரித்ததில் அவருக்கு திருட்டில் முன் அனுபவமில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதனால் திருட முயன்ற குற்றத்திற்காக அவரை பிரிவு 380/511கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.