குற்றம்

”என் தற்கொலைக்கு இவர்தான் காரணம்”.. கடிதம் எழுதி வைத்துவிட்டு உதவி ஆய்வாளர் தலைமறைவு!

webteam

தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வடுவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமறைவாகி உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முருகானந்தம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பெருகவளந்தான் காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி திருட்டு வழக்கில் மணிகண்டன் என்பவரை கைது செய்ததில் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மார்ச் 19ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் மணிகண்டனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக 2017 ஆம் ஆண்டு சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு உதவி ஆய்வாளர் முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் 31ஆம் தேதி முருகானந்தம் ஓய்வு பெறும் நிலையில் தன்னுடைய தற்கொலைக்கு சிபிசிஐடி ஆய்வாளர் ரகமத் நிஷா என்பவர் தான் காரணம் எனவும், தனக்கு நீதி வேண்டும் எனவும் கூறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இது சம்பந்தமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.