குற்றம்

மிளகாய் பொடி தூவி அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

மிளகாய் பொடி தூவி அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

Rasus

நாமக்கல் அருகே அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தவர் ஆ.ஆர்.பி.சுரேஷ். இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார். நிலப்பிரச்சனை தொடர்பாக மலைவேப்பன் குட்டை அடுத்த வெட்டுகாடு பகுதியில் உள்ள வழக்கறிஞர் பாபு என்பவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் குமார் என்பவருடன் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் சுரேஷ். அவர்கள் வெட்டுகாடு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவர்களை மறித்த அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் உள்ளிட்ட இரண்டு பேர் கொண்ட கும்பல் இருவர் மீதும் மிளகாய் பொடி தூவி சுரேஷை கீழே தள்ளியுள்ளனர். பின்னர் சுரேஷை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் சரமாரியாக வெட்டியிருக்கின்றனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். சுரேஷ் உடன் வந்த குமாருக்கும் லேசான வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவகுமார், விமல் குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். சுரேஷ் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சனைக்குரிய இடங்களை தன் பெயரில் கிரயம் செய்து பலரை ஏமாற்றியதாக பலரும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிட்டதக்கது.

தகவல்கள்: செய்தியாளர், துரைசாமி.