குற்றம்

பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடித்ததாக போலியாக சான்றிதழ் -7 பேர் மீது நடவடிக்கை

Sinekadhara

தஞ்சை தமிழப் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுக்காக, டைப்ரைட்டிங் படித்து முடித்ததாக போலியாக சான்றிதழ் கொடுத்த 7 பேர் மீது தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும், சரவணன், சக்தி சரவணன், சண்முகவடிவு, நிர்மலா, அன்பரசன், வெங்கடேசன், செல்வராஜ் ஆகிய 7 பேரும் பதவி உயர்வுக்காக, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலியாக சான்றிதழ் பெற்று தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தில் சமர்பித்துள்ளனர். இதன்மூலம் கடந்த 6 ஆண்டுகளாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககம் தற்போது சான்றிதழ்களை சரிபார்த்ததில் அவை போலி சான்றிதழ்கள் என தெரியவந்ததை அடுத்து இந்த 7 பேரின் சான்றிதழ்களையும் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து 2020ஆம் ஆண்டு முதல் புகார் கொடுத்த வரும் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் கூறுகையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பதவி உயர்வுபெற்ற அனைவரின் சான்றிதழ்களையும் ஆய்வு செய்திட வேண்டும் எனவும், இந்த ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும், போலி சான்றிதழ் கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

எத்தனை முறை மனு அனுப்பியும் பல்கலைக்கழக நிர்வாகம் தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்கம் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தற்போதுதன் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்று அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.