mobile theft
mobile theft file image
குற்றம்

"2 போனையும் நான்தான் திருடுனேன்.. போன் வேணும்னா எவ்ளோ தருவீங்க" - பேரம்பேசிய திருடன்..மடக்கிய போலீஸ்

PT WEB

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தராசு கிராமத்தை சேர்ந்தவர் ஏழைபெருமாள். இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 போன்கள் திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ந்து போன ஏழைபெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர், என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பி போயுள்ளனர். இந்த நிலையில், காணாமல் போன செல்போனில் இருந்து ஏழை பெருமாளின் மனைவிக்கு அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பை எடுத்து பேசிய ஏழைபெருமாளிடம், "தான் தான் ஃபோன்களை திருடியதாகவும், திருப்பித்தர வேண்டுமானால் பணம் வேண்டும்" என்றும் திருடன் பேசியுள்ளான். “எது கிடைச்சாலும் திருடுவேன், பணம் கொடுத்தா திருப்பி தருவேன். புதுசா 2 ஃபோன் வாங்கனும்னா செல்வாகும்ல” என்று பேசத்தொடங்கிய திருடன், ஒருகட்டத்தில் 15,000 கொடுத்தால்தான் போன்களை திருப்பித்தருவேன் என்றும் பேரம் பேசியுள்ளான்.

மேலும், “போலீஸிடம் போனால் பயனில்லை, என்னிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே விட்டுவிடுவார்கள்” என்றும் கூறியுள்ளார். வரும்போது சாப்பாடு எடுத்து வாருங்கள் என்றும், இடத்தை சொல்கிறேன் என்றும் திருடன் பேசிய நிலையில், காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஏழை பெருமாள். கிடைத்த தகவல்களை கொண்டு, திருடன் சொன்ன இடத்திற்கு சென்ற போலீஸார் அவனை லாவகமாக மடக்கிப்பிடித்தனர்.

விசாரிக்கையில், திருடிய நபர், திண்டிவனம் அடுத்த ஆட்சிப் பக்கம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பது தெரியவந்தது. அப்போது, அய்யனாரிடம் இருந்து போன்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.