குற்றம்

பிட்காயின் பக்கம் ஆய்வை திருப்பும் லஞ்ச ஒழிப்புத்துறை - நெருக்கடியில் முன்னாள் அமைச்சர்கள்

Sinekadhara

ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸியிலும் முதலீடு செய்துள்ளார்களா என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிரமாக ஆய்வுசெய்ய முடிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை நான்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தொடர்பான இடங்களில் அதிரடியாக சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் கணக்கில் வராத சொத்துக்கள், முதலீடுகள் குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவை இருக்கின்றனவா என்பது குறித்து தீவிரமாக போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதற்கு சுலபமாக, சமீபகாலங்களில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பலரும் அரசுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அந்த அடிப்படையில் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய அமைச்சர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, சொத்துக்களாகவோ, அல்லது பினாமி பெயரில் சொத்துக்களாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்துள்ளார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிரிப்டோகரென்ஸியில் முதலீடு செய்து உள்ளார்களா எனவும் ஆய்வுசெய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிப்டோகரென்ஸி மீது முதலீடு செய்வது என்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் சட்டப்பூர்வமாகவும் மாற்றப்படவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாயை முன்னாள் அமைச்சர்கள் கிரிப்டோகரென்ஸியில் முதலீடு செய்துள்ளார்களா என தீவிரமாக ஆய்வுசெய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையைப் பொறுத்தவரையில் ஒரு பிட் காயின் விலை 50 லட்சத்தை தாண்டுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கிரிப்டோகரன்ஸி மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இருப்பதால் அவர்களை பயன்படுத்தி தாங்கள் சட்டவிரோதமாக சேர்த்து வைத்த பணத்தை பதுக்கிவைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.