குற்றம்

திருட்டுத்தனமாக மதுபானங்கள் கடத்தல்; மடக்கிப்பிடித்த காவல்துறை

webteam

ஓமலூர் அருகே இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான கடைகள் வைத்து நடத்தபட்டு வருவதாக  தகவல் வந்தது. இந்த கடைகள் மூலம் அதிகாலை முதலே மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் ஓமலூர் வட்டரா பகுதிகளில் உள்ள  பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கபடுவது குறித்து புதிய தலைமுறையில் கடந்த வாரத்தில் இரண்டு முறை செய்திகள் ஒலிபரப்பாகின. இதனை தொடர்ந்து சந்துக்கடைகளை ஒழிக்கவும், கடைகளுக்கு மது பானங்கள் கொண்டு வருவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ஓமலூரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதிக்கு பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜி, ஆய்வாளர்கள் ரங்கசாமி, ராஜா ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது . இதையடுத்து காரில் இருந்த 328 மதுபாட்டில்கள், கார் மற்றும் இரு சக்கர வானத்தை பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தலில் தொடர்புடைய மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஓமலூர் அருகேயுள்ள முத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், அவரது அண்ணன் சிவக்குமார், சங்ககிரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் சந்திரன் ஆகியோர் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் இவர்கள் யார் யாருக்கு மது சப்ளை செய்து வருகின்றனர்? இதுபோன்ற வெளிமாநில மதுபானங்கள் கடத்தலில் தொடர்புடையவர்கள், ஓமலூர் வட்டாரத்தில் எத்தனை கடைகளுக்கு மது பாட்டில்கள் சப்ளை செய்து வருகிறார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்