குற்றம்

நடுரோட்டில் வாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்... 11பேர் மீது வழக்குப்பதிவு

kaleelrahman

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (23). இவர் தனது பிறந்த நாளை, அப்பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நடுத்தெருவில் கேக்கை வைத்து வாளால் வெட்டி கொண்டாடியுள்ளார். கோகுல கண்ணன் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியதை ஒருவர் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து பின்பு சமூக வலைதளங்களில் அதனை பரப்பியுள்ளார். இது குறித்து திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகாரளித்தார்.


இந்நிலையில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கோகுல கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ராமர், முத்துக்குமார், தனசேகர், வெங்கடேஷ், சொக்கலிங்கம், சுந்தரம், துரைதாஸ், சுடலை, கிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 11 பேர் மீது திசையன்விளை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்பு அவர்களை எச்சரித்த போலீசார், கொரோனா காலம் என்பதால் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கினர். வாளை வைத்து கேக் வெட்டும் இதுபோன்ற கலாசாரம் சென்னை போன்ற பெரும் நகரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தென் தமிழகத்தில் இதே போன்று வாளால் கேக் வெட்டி கொண்டாடும் கலாசாரம் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு சட்ட விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.