காதலிக்க மறுத்த சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 18-வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (21), பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் இவர், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்துள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் காதலை வெளிப்படுத்தியும் ஒப்புக் கொள்ளாததால், பழிவாங்கும் நோக்கில் சிறுமி குளிக்கும்போது, அந்த சிறுமிக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த வீடியோவை சிறுமியின் சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பியதோடு, இந்த வீடியோவை தனக்கு யாரோ வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைத்ததாகவும், அதையே பார்வேர்ட் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த சிறுமியின் சகோதரர், இதுகுறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்ற போலீசார், வழக்குப் பதிவு செய்து, விஜய்யை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது, வீடியோ எடுத்தது விஜய் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜய்யை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.