குற்றம்

'எங்க பணத்த மீட்டுத்தாங்க' - திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களால் பரபரப்பு

webteam

வாணியம்பாடி அருகே லோன் கொடுப்பதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் செட்டியப்பனூர் பகுதியில் அக்ஷயம் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி, ரூ.2652 கட்டினால் 40 ஆயிரம் ரூபாய் லோன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.

இந்நிலையில், மகளிர் குழுக்களை சேர்ந்த 703 பெண்களிடம் தலா ரூ.2652 வீதம் வசூலித்து நிதி நிறுவனம் தொடங்கிய ஒரு மாதத்தில் வசூல் செய்த ரூபாய் 20 லட்சத்தை எடுத்துக் கொண்டு கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவோடு இரவாக தலைமறைவாகியுள்ளார்.

இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து 12 நாட்களாக தலைமறைவாக இருந்த விக்னேஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த பணம் செலுத்தி பாதிக்கபட்ட மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டவரை தங்களிடம் காண்பிக்க வேண்டும். செலுத்திய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.