திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்னாரகவுன்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் பென்னி. இவர் தனியார் பள்ளியில் வேலை செய்துவருகிறார்.இவரது மகன் சிரில்பென்னி பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் தந்தை பென்னி தனது மகன் சிரிலை விளையாட செல்லாமல் வீட்டில் இருந்து தேர்வுக்கு படிக்க கூறிவந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை சிரில்பென்னி வெளியே சென்றுள்ளார். வெளியே சென்றுள்ள சிரில் இரவு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் மகனை பல இடங்களிலும் தேடி கிடைக்காததால் தந்தை பென்னி காவல் நிலையத்தில் மகனை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். இந்த சூழலில் சிவக்குமார் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் இறந்த நிலையில் கிடப்பதாக தாலுக்கா போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்வப இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீஸார் கிணற்றில் இருந்து உடலை மீட்டு விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்தது சிரில்பென்னி என்பது தெரியவந்தது. மேலும் தந்தை திட்டியதால் மனம் உடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுத்தேர்வுக்கு படிக்க கூறி தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.