குற்றம்

லிஃப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்த நபர்கள்!

லிஃப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்த நபர்கள்!

webteam

வேலூர் மாவட்டத்தில் லிஃப்ட் தர மறுத்த நபரைக் கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்று விட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார் தட்சிணாமூர்த்தி. அப்போது, மதுபோதையில் நின்று கொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர், அவரிடம் லிஃப்ட் கேட்டதாகத் தெரிகிறது.

தட்சிணாமூர்த்தி லிஃப்ட் தர மறுத்ததால் ஆத்திரமடைந்தவர்கள், அவரை கத்தியால் குத்தியும், காதை அறுத்தும், தலை மீது கல்லைப் போட்டும் தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்‌ வழியிலேயே உயிரிழந்தார். 

இதையறிந்த கிராம மக்கள் மற்றும் தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததன் அடிப்படையில்,மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.